2 சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 மற்றும் 6 வயதுடைய 2 சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
2 சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
Published on

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சுப்பிரமணியன் (வயது 72) என்பவர் 5 மற்றும் 6 வயதுடைய இரண்டு சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய முந்தைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா புலன் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியை கைது செய்தார்.

புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி சுரேஷ்குமார் இன்று குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் ஒரு லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த ஏ.டி.எஸ்.பி. சண்முகம் (CWC), அம்பாசமுத்திரம் உட்கோட்ட டி.எஸ்.பி. கணேஷ்குமார், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் இன்ஸ்பெக்டர் வனிதா, வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெகடர் ராதா (தற்போது தாம்பரம் குற்றப்பிரிவு), வழக்கின் விசாரணைக்கு உதவி செய்த முதல் நிலை பெண் காவலர் சந்தோசசெல்வி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 3 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனையும், ஒரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் பெற்றுத் தரப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com