கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழப்பு

கோவில்பட்டி மீனாட்சிநகர் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளப் பகுதியில் மூதாட்டி ஒருவர் சடலமாக இறந்து கிடந்தார்.
ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மீனாட்சிநகர் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளப் பகுதியில் நேற்று காலையில் மூதாட்டி ஒருவர் சடலமாக இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் பேரில் தூத்துக்குடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அவர் அந்த வழியாகச் சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை:

இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய தீவிர விசாரணையில், உயிரிழந்த மூதாட்டி தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகேயுள்ள ஆவுடையாபுரம் பகுதியைச் சேர்ந்த மலைசாமி என்பவரின் மனைவி மாடத்தி (வயது 60) என்பது கண்டறியப்பட்டது.

மாடத்தி கோவில்பட்டி பகுதிக்கு எதற்காக வந்தார்? ரெயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது அவரது மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற பல்வேறு கோணங்களில் ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com