தேர்தல் ஆணைய விவகாரம்: தமிழகத்தில் ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனை - மாணிக்கம் தாகூர்

தமிழகத்திலும் ‘இந்தியா’ கூட்டணி களத்தில் முழு ஒற்றுமையுடன் வலிமையாகக் களம் கண்டுள்ளது.
மாணிக்கம் தாகூர்
Published on: 

சென்னை,

இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

‘இந்தியா’ கூட்டணி

டெல்லியில் 21 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்ற ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தில், தேர்தல் நம்பகத்தன்மை மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையரின் ‘SIR’ திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் அரங்கேற்றப்பட்ட முறைகேடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், தேர்தல் ஆணையத்தை நோக்கி மாபெரும் கண்டனப் பேரணியை முன்னெடுப்பது உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சி வியூகங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்திலும் ‘இந்தியா’ கூட்டணி களத்தில் முழு ஒற்றுமையுடன் வலிமையாகக் களம் கண்டுள்ளது!

மக்கள் கருத்தரங்கங்கள்

கடந்த ஆகஸ்ட் மாதம், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்பட்டு ஜனநாயக விரோதமாகக் கூட்டத்தொடர் நடத்தப்பட்ட விதம் குறித்தும், பாஜக-ஆர்.எஸ்.எஸ் அரசால் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகத்தின் மாவட்டங்களில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் மக்கள் கருத்தரங்கங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

சத்தியமூர்த்தி பவன்

அதன் அடுத்தகட்டமாக, மோடி - அமித்ஷா தலைமையிலான பாஜக - ஆர்.எஸ்.எஸ் அரசு, தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சியைச் சிதைத்து ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதையும், SIR பெயரிலான வாக்குத் திருட்டையும் கண்டித்து, மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது மற்றும் களப்பணிகள் குறித்து ஆலோசிக்க, இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

பங்கேற்பு

இக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி, சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், சிபிஐ தேசியக் குழு-டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

நாட்டையும் ஜனநாயகத்தையும் சீரழிக்கும் பாஜக - ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு எதிராக நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு எப்போதும் மக்களோடு களத்தில் நிற்போம்; இன்று “புதிய தோழர்களும் “ நம்முடன் கைகோர்க்க, ‘இந்தியா’ கூட்டணி மேலும் பெரும் மக்கள் சக்தியாகப் புதிய எழுச்சி பெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com