டி.டி.வி.தினகரனை துரத்தும் தேர்தல் தோல்விகள்

தேனி தொகுதியில் டி.டி.வி.தினகரனை வீழ்த்தி, தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் வெற்றி பெற்றார்.
டி.டி.வி.தினகரனை துரத்தும் தேர்தல் தோல்விகள்
Published on

சென்னை,

தேனி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், அ.ம.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார். நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கை முடிவில், தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வனிடம் அவர் தோல்வியை தழுவினார்.

டி.டி.வி.தினகரன் கடந்த 1999-ம் ஆண்டு தேர்தல் களத்துக்கு வந்தார். அப்போதைய பெரியகுளம் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு முதல் வெற்றியை பதிவு செய்தார். தொடர்ந்து 2004-ம் ஆண்டு அதே நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டபோது, தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரூணிடம் தோல்வியை தழுவினார்.

இதையடுத்து அவரை ஜெயலலிதா ராஜ்யசபை எம்.பி. ஆக்கினார். அதன்பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த டி.டி.வி.தினகரன், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மீண்டும் அரசியலுக்கு வந்தார். 2017-ம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், 2021-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அவர் உள்பட தமிழகத்தில் அந்த தேர்தலில் போட்டியிட்ட அனைத்து அ.ம.மு.க. வேட்பாளர்களும் தோல்வியை தழுவினர். தன்னை முதல் முதலில் எம்.பி. ஆக்கிய பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி, தேனி நாடாளுமன்ற தொகுதியாக மாறிய நிலையில், மீண்டும் அவர் தேனியில் களம் இறங்கினார். இந்த முறை தீவிர பிரசாரங்கள் செய்த போதும் அவர் தோல்வியை தழுவியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com