மோடியின் நல்லாட்சி தொடர வேண்டும் - டி.டி.வி. தினகரன்

மோடியின் நல்லாட்சி தொடர வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை தேர்தல் முடிவுகள் பிரதிபலித்துள்ளன என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும்; தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் நரேந்திர மோடி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில், சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைப்பது, அக்கூட்டணி மீதும்,மோடி மீதும் நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு கூட்டணிக் கட்சிகளை ஒன்றிணைத்து, வலுவான கூட்டணியை அமைத்து, அதன் மூலம் வெற்றிக்கான சிறந்த அடித்தளத்தை அமைத்த மோடியின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் பெருவாரியான வாக்குகளை வழங்கி வெற்றி பெறச் செய்த நாட்டு மக்களுக்கும் இந்நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக நாடுகள் வியக்கும் அளவிற்கு கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி சாதனை படைத்த மோடியின் நேர்மையான, ஊழலற்ற நல்லாட்சி மென்மேலும் தொடர வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை தேர்தல் முடிவுகள் பிரதிபலித்துள்ளன.

வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு ஓய்வின்றி உழைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, உலக அரங்கில் இந்தியாவை மேலும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் மோடி அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com