மின்வாரிய டெண்டர் அதிகார வரம்பு இரட்டிப்பு; ரூ.80 கோடியிலிருந்து ரூ.160 கோடியாக உயர்வு

பல்வேறு நிலை அதிகாரிகளுக்கான டெண்டர் ஒப்புதல் அதிகாரங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
மின்வாரிய டெண்டர் அதிகார வரம்பு இரட்டிப்பு; ரூ.80 கோடியிலிருந்து ரூ.160 கோடியாக உயர்வு
Published on: 

சென்னை,

தமிழ்நாடு மின்வாரியத்தில் டெண்டர் ஒப்புதல் அதிகார வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்கான வரம்பு ரூ.80 கோடியிலிருந்து ரூ.160 கோடியாகவும், பொருட்கள் கொள்முதலுக்கான வரம்பு ரூ.40 கோடியிலிருந்து ரூ.80 கோடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இணை மேலாண் இயக்குநர் தலைமையில் புதிய டெண்டர் குழு அமைக்கப்பட்டு, ரூ.100 கோடி வரையிலான பணிகள் மற்றும் ரூ.50 கோடி வரையிலான கொள்முதலுக்கு கொள்முதலுக்கு ஒப்புதல் வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்வாரியத்தின் பல்வேறு நிலை அதிகாரிகளுக்கான டெண்டர் ஒப்புதல் அதிகாரங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தலைமை பொறியாளர், மேற்பார்வை பொறியாளர், செயற்பொறியாளர் நிலையிலான ஒப்பந்தப்புள்ளி குழுக்களின் வரம்புக்குள் வரும் பணிகளுக்கு, மதிப்பீட்டு தொகை அதிகரித்தால், தலைமை அலுவலகத்தில் ஒப்புதல் பெற வேண்டும் நென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகார வரம்புகளுக்கும் புதிய மாற்றங்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக மதிப்பிலான டெண்டர்களை பரிசீலித்து முடிவெடுக்கும் அதிகாரம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

குறைந்த மதிப்பிலான கொள்முதல் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர் அதிகாரங்கள் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X