மரத்தின் மீது முன்னங்கால்களை தூக்கி வைத்து பலாப்பழம் பறித்த யானை: கோத்தகிரி அருகே ருசிகரம்

கோத்தகிரியில் துதிக்கையை நீட்டி, மரத்தின் மீது ஏறி பலாப்பழத்தை பறித்து ருசித்து சாப்பிட்ட காட்டு யானை.
பலாப்பழத்தை பறித்து ருசித்து சாப்பிட்ட காட்டு யானை
Published on
Updated on

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் துதிக்கையை நீட்டி, மரத்தின் மீது ஏறி பலாப்பழத்தை பறித்து காட்டு யானை ருசித்து சப்பிட்டது. நீலகிரி மாவட்டத்தின் அழகிய மலைக்கிராமம் கோத்தகிரி. அதன் அருகே அடர்ந்த காடுகளின் எல்லையில் அமைந்திருந்தது குஞ்சப்பணை கிராமம்.

காட்டில் இருந்து ஒரு பெரிய காட்டு யானை உணவை தேடி கிராமத்திற்குள் நுழைந்தது. நீண்ட நேரமாக உணவு கிடைக்காததால், அந்த யானை கடும் பசியில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தது.

பலா மரத்தை கண்டது

அப்போது, குளிர்ந்த காற்றில் தித்திக்கும் பலாப்பழத்தின் வாசனை பலமாக வீசியது. பசியில் இருந்த யானையின் துதிக்கை அந்த வாசனையை உடனே மோப்பம் பிடித்தது. அந்த திசையை நோக்கி மெல்ல நகர்ந்த யானை, அங்கு நின்றிருந்த ஒரு பெரிய பலா மரத்தை கண்டது. பலாப்பழங்கள் அனைத்தும் மரத்தின் மிகவும் உயரமான கிளையில் தொங்கி கொண்டிருந்தன.

தரைமட்டத்தில் இருந்து தும்பிக்கையை எவ்வளவு நீட்டினாலும் பழங்களை எட்ட முடியாது என்பதை யானை உணர்ந்தது. பசியோடு நின்ற அந்த யானை, "இதை எப்படி பறிப்பது?" என்று சில நிமிடங்கள் அமைதியாக நின்று யோசித்தது.

புத்திசாலி யானை

பின்னர், மரத்தின் ஒரு கிளையை துதிக்கையால் பிடித்துக்கொண்டு, முன்னங்கால்கள் இரண்டையும் மரத்தின் மீது தூக்கி வைத்தது. அதன் பிறகு, துதிக்கையை உயரே நீட்டி பலாப்பழங்களை பறித்தது. பின்னர், மரத்தின் அடியிலேயே அந்த பழங்களை சுமார் ஒரு மணி நேரம் பலா விருந்தை முடித்து கொண்டு, வயிறு நிறைந்த திருப்தியோடு அந்த புத்திசாலி யானை வந்த வழியே மெல்ல நடந்து மீண்டும் காட்டுப்பகுதிக்குள் திரும்பி சென்றது.

பலாப்பழம் பறித்த யானையை சிலர் தங்களுடைய செல்போன்களில் வீடியோவாக படம் பிடித்தனர். அந்தக்காட்சி சமூக வலைத்தளங்களில் இப்போது வலம் வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com