லஞ்சம் வாங்கிய புகாரில் கைதான அங்கித் திவாரியிடம் அமலாக்கத்துறை விசாரணை

சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ற அடிப்படையில், அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மதுரை,

மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்தவர் அங்கித் திவாரி (வயது 32). அமலாக்கத்துறை அதிகாரி. கடந்த ஏப்ரல் மாதம் மதுரை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் இங்கு பணியாற்றியபோது, திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு டாக்டர் மீதான வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த டாக்டர் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூ.20 லட்சத்துக்கான நோட்டுகளை டாக்டரிடம் கொடுத்து, அதை அங்கித் திவாரியுடம் ஒப்படைக்க கூறினர். அதன்படி அவரின் காரில் ரூ.20 லட்சம் லஞ்சப்பணத்தை டாக்டர் வைத்தார். இதையடுத்து காரில் சென்ற அங்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அங்கித் திவாரி தரப்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 19 ஆம் தேதி நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு கடந்த 20 ஆம் தேதி வழங்கப்படும் என தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார். இதனையடுத்து அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதனிடையே மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அந்த சமயத்தில் அவர்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பணி செய்ய விடாமல் தடுத்ததாக, தல்லாகுளம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் லஞ்சம் வாங்கிய புகாரில் கைதான அங்கித் திவாரியிடம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ற அடிப்படையில், அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com