என்ஜின் கோளாறு: சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்

விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, விமானம் இரவு 11.37 மணியளவில் ஓடுபாதை 25-ல் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இண்டிகோ
Published on

சென்னை,

கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு 224 பயணிகளுடன் இண்டிகோ நிறுவனத்தின் 6இ-723 விமானம் வந்து கொண்டிருந்தது. இரவு 11.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியிருந்த நிலையில், விமானத்தை தரையிறக்க விமானி தயாரானபோது இடதுபுற என்ஜின் செயலிழந்திருப்பதை கண்டறிந்தார்.இதையடுத்து விமானி உடனடியாக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அவசரநிலை

விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, விமானம் இரவு 11.37 மணியளவில் ஓடுபாதை 25-ல் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதைத் தொடர்ந்து, இரவு 11.47 மணியளவில் முழு அவசரநிலை திரும்பப் பெறப்பட்டது. இதன் பின்னர் சென்னை விமான நிலையத்தின் வழக்கமான செயல்பாடுகள் எந்தவித பாதிப்புமின்றி தொடர்ந்து நடைபெற்றன.

உறவினர்கள் பதற்றம்

விமானத்தின் என்ஜின் கோளாறுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமானத்தில் என் ஜின் கோளாறு காரணமாக அவசர நிலை அறிவிக்கப்பட்டு விமானம் தரையிறக்கப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் மற்றும் அவர்களை வரவேற்க காத்திருந்த உறவினர்கள் மத்தியில் பதற்றம் தொற்றியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com