

சென்னை,
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் 2-ம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்ற 79,403 மாணவ-மாணவிகளுக்கு பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான தற்காலிக இட ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. பொதுப்பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடைபெற்றது.
முதல் சுற்றில் பொதுப்பிரிவைச் சேர்ந்த 26,802 மாணவ-மாணவிகளுக்கும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 2,177 மாணவ-மாணவிகளுக்கும் என மொத்தம் 28,979 பேருக்கு பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து பொறியியல் 2-ம் சுற்று கலந்தாய்வு கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இதில் 93,117 மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
அழைக்கப்பட்ட மாணவர்கள் கடந்த 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்தனர். இதையடுத்து, அவர்கள் தேர்வு செய்த விருப்பங்களின் அடிப்படையில் தற்காலிக இட ஒதுக்கீடு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
2-ம் சுற்று கலந்தாய்வில் பொதுப்பிரிவைச் சேர்ந்த 68,388 மாணவர்களுக்கும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 11,015 மாணவர்களுக்கும் என மொத்தம் 79,403 மாணவ-மாணவிகளுக்கு பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான தற்காலிக இட ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக இட ஒதுக்கீட்டை மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். இதற்காக இன்று மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இறுதி இட ஒதுக்கீடு ஆணை நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.