ஈரோடு: தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் இரவு யோகானந்தத்தின் தோட்டத்தில் புகுந்தன.
ஈரோடு: தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
Published on

தாளவாடி,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களிலும் ஏராளமான யானைகள் உள்ளன. தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் அடிக்கடி வனப்பகுதியைவிட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களுக்குள் நுழைந்துவிடுகின்றன. அவ்வாறு செல்லும் யானைகள் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. ஆசனூர் வனச்சரகத்துக்குட்பட்ட அரேபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் யோகானந்தம் (வயது 40). இவர் 4 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் யோகானந்தத்தின் தோட்டத்தில் புகுந்தன. பிளிறல் சத்தம் கேட்டு யோகானந்தம் தோட்டத்துக்கு ஓடிச்சென்று பார்த்தார். அப்போது யானைகள் கரும்பு பயிர்களை சேதப்படுத்திக்கொண்டு இருந்தன.

இதையடுத்து அக்கம் பக்கத்து விவசாயிகளை அவர் உதவிக்கு அழைத்தார். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்தும், ஒலி எழுப்பியும் யானைகளை விரட்ட முயன்றார்கள். ஆனால் அதிகாலையில்தான் யானைகள் தோட்டத்தை விட்டு வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றன. யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததில் 2 ஏக்கர் கரும்பு பயிர் சேதமடைந்தது. அதற்கு வனத்துறையினர் உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com