

சென்னை,
கரூரில் ரோடு போடாமல் ரூ.3.23 கோடி முறைகேடு நடைபெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் மனுவில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் உள்பட 11 பேர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பொறுப்பேற்ற அருண், இந்த புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் கடந்த மாதம் 23-ந்தேதி அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்தவுடன் அதிரடி சோதனை வேட்டையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இறங்கினார்கள்.
அதன்படி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு உள்பட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மாதம் 25-ந்தேதி அன்று சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் வழக்கு தொடர்பான விசாரணைக்கு 3-ந்தேதி (அதாவது இன்று) ஆஜராகுமாறு எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் அனுப்பினர்.
இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆஜராகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலை சரியில்லாததால் அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜராகி, திங்கட்கிழமை அல்லது வேறு ஒரு நாளில் ஆஜராக கால அவகாசம் கோரியுள்ளார்.