வைகோ விமர்சனம் செய்தாலும் நாங்கள் அவரை நேசிப்போம்-அமைச்சர் வன்னி அரசு

கோவை வைகோ விமர்சனம் செய்தாலும் நாங்கள் அவரை நேசிப்போம் என்று கோவையில் அமைச்சர் வன்னி அரசு கூறினார்.
 வன்னி அரசு
Published on

கோவை,

தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவை அருகே உள்ள கெம்பனூரில் பட்டியல் இன மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நீண்ட நாட்களாக அரசு பஸ் செல்லாமல் இருந்தது.

தற்போது அங்கு பஸ் சென்று வருகிறது. அங்கு சென்று அந்தப்பகுதி மக்களை சந்திக்க உள்ளேன். தமிழகம் முழுவதும் சமூக நீதித்துறைக்கு உட்பட்ட விடுதிகளில் ஆய்வு செய்து வருகிறோம்.அந்த வகையில்தான் தமிழக முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு செய்தார். அப்போது மின்தடை ஏற்பட்டால் சிரமமாக இருக்கிறது எனவே இன்வெர்ட்டர் வேண்டும் என்று கேட்டனர். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர், உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டு உள்ளார். அத்துடன் தரமான உணவு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் டைரிகளில் சாதி பெயர் கேட்கப்படுவது குறித்த தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே அறிவித்து உள்ளார். சாதி தொடர்பான அணுகுமுறை பாகுபாடு இருக்கக் கூடாது. அந்த அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம். இரட்டை குவளை முறையை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த முறை எங்காவது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் தீண்டாமையை கடைபிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை நாங்கள் எப்போதும் நேசிக்கக்கூடியவர்கள். அவர் எந்த விமர்சனம், அவதூறு பரப்பினாலும் நாங்கள் அவரை நேசித்துக்கெண்டே இருப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com