

சென்னை,
பா.ம.க. தலைர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகில் உள்ள வல்லூர் கிராமத்தில் தேர்வுக்காக வீட்டில் படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவரை கஞ்சா போதையில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் படுகாயமடைந்த மாணவி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை திமுக ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
கஞ்சா போதையில் வந்த கும்பல் வீடு புகுந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், அதற்கு எதிராக மாணவி போராடியதால் அவரை கஞ்சா போதைக் கும்பல் கொடூரமாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. திமுக ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெருகியிருப்பதற்கு கொடூரமான எடுத்துக்காட்டு தான் இந்த நிகழ்வு ஆகும்.
திமுக ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டம் பெருகி விட்டதால் பெண்கள் வெளியில் நடமாட முடியாத நிலை தான் இதுவரை நிலவி வந்தது. ஆனால், இப்போது வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கஞ்சா போதை விவகாரத்தில் திமுக ஏற்பத்திய பரிணாம வளர்ச்சி இது தான். இந்த கொடூர நிகழ்வில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை இன்னும் கைது செய்யவில்லை என்பது வெட்கக்கேடானது.
திமுக ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பது மீண்டும், மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் அதற்கான ஒரே வழி திமுக ஆட்சியை அகற்றுவது தான். இன்னும் 8 நாள்களில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு, அனைவருக்கும் பாதுகாப்பான ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் ஏற்படுத்துவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.