

சென்னை,
தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
“கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்(இ.வி.எம்.) பழுதுபட்டுள்ளது தொடர்பாக ஏற்கனவே ஆதரங்களுடன் சுப்ரீம் கோர்ட்டில் எடுத்து வைத்தோம். தேர்தல் ஆணையம் மொத்தம் 19 இ.வி.எம்.களை சரிபார்த்துவிட்டு 14 இ.வி.எம்.கள் சரியாக இயங்குகின்றன என்று மட்டும் ஒரு அறிக்கையை கொடுத்துள்ளார்கள்.
இது தவறு 14 மெஷின்களில் ஐந்து மெஷின்கள் சரியாக இல்லை என்றால் ஏறக்குறைய 32.33% இ.வி.எம்.கள் பழுதடைந்திருக்கிறது என்பதை நாங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறோம். எனவே கொளத்தூர் தொகுதியினுடைய 100% இ.வி.எம்.களையும் சரி பார்க்க வேண்டும். அந்த VV பேட்டில் இருக்கக்கூடிய வாக்கு சீட்டுகளை எண்ணி பார்க்க வேண்டும் என்று ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தோம்.
இதனுடைய விளைவாக கான்சிகவன்சியல் பிரேயராக எங்களது தலைவர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். ஆக இரண்டு பிரேயர்கள் செய்யப்பட்டிருந்தன. இ.வி.எம். தொடர்பாக அதிக குற்றச்சாட்டுகள் எழுந்ததால் இந்த வழக்கை தொடுக்க வேண்டும் என கழக சட்டத்துறைதான் முன்னெடுத்தது. கழக தலைவரிடம் எடுத்துச் சொல்லி அவருடைய ஒப்புதலை பெற்று நாங்கள் அந்த மெஷின்களை சரிபார்த்தோம்.
அதில் ஐந்து மெஷின்கள் குறைபாடு உடையவதாக இருக்கவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறோம். ‘ரெப்ரசென்டேஷன் ஆப் பீப்பிள் ஆக்ட்’ பிரிவு 100-ன் படி இன்னென்ன காரணங்களுக்காகத்தான் தேர்தலை தள்ளுப்படி செய்ய வேண்டும் என்று ஒரு பிரிவு இருக்கிறது. அதில் இ.வி.எம்.கள் சரியாக இல்லை என்றால் பழுதடைந்திருந்தால் தேர்தலை தள்ளுபடி செய்யலாம் என்ற காரணம் அதில் சொல்லப்படவில்லை. ஏனென்றால் அது 1951-ல் இயற்றப்பட்ட சட்டம். இ.வி.எம்.கள் அறிமுகப்படுத்தியபோது கூட அதற்கு ஏற்றவர் போல் ரெப்ரசென்டேஷன் ஆப் பீப்பிள் ஆக்ட் சட்டத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.
இரண்டாவதாக அரசியல் அமைப்பு சட்டத்தில் எல்லா தேர்தல் வழக்குகளையும் தேர்தல் குறித்த வழக்குகளையும் தேர்தல் மனுவாகத்தான் தாக்கல் செய்ய முடியும் என்று சொல்லி சொல்லியிருக்கிறது. தேர்தல் மனுவை 45 நாட்களுக்குள்ளாக தாக்கல் செய்ய வேண்டும். கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரை நாங்கள் தேர்தல் முடிவு வந்த மூன்றாவது தினமே 7. 5. 2026-லேயே அதற்குரிய பணத்தைக்கட்டி தேர்தல் ஆணையத்தில் எங்களுக்கு இந்த 14 இ.வி.எம்.களை சரிபார்க்க வேண்டும் என கேட்டிருந்தோம்.
ஆனால் தேர்தல் ஆணையம் 45 நாட்களுக்கு பிறகுதான், சொல்லப்போனால் மூன்று மாதங்களுக்கு பிறகுதான் அந்த இயந்திரங்களை எடுத்து பரிசோதனை செய்தார்கள். எனவே தேர்தல் மனுவை ஒரு எதிர்பார்க்கும் நோக்கில் தாக்கல் செய்ய முடியாது. இன்றைக்கு ஐகோர்ட்டு, கொளத்தூர் தொகுதியில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்பது தேர்தல் மனுவாகத்தான் தாக்கல் செய்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
எனவே அது நிலைக்கத்தக்கதுஅல்ல. இருப்பினும் கூட 100% இ.வி.எம். மெஷின்களை சரிபார்ப்பது குறித்து உரிய மனுவை உரிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கொள்ளக்கூடிய அனுமதியை வழங்கி இன்றைக்கு தீர்ப்பளித்திருக்கிறார்கள். எனவே இது குறித்து தலைமைக் கழகத்திடம் எடுத்துச் சொல்லி இதை சுப்ரீம் கோர்ட்டிற்கு எடுத்துச் செல்ல நாங்கள் கேட்போம். தலைமைக் கழகத்தினுடைய அறிவுறுத்தல் படி நாங்கள் செயல்படுவோம்.
இ.வி.எம்.கள் பழுதாகி இருந்தால் என்ன நிலைமை என்பதற்கு இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் கொளத்தூர் தொகுதியில்தான் இந்த சட்ட சிக்கல் எழுப்பப்பட்டிருக்கிறது. எப்படி இட ஒதுக்கீட்டை 1950-களிலே உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் செல்லாது என்று சொன்னபோது ஒரு தொடர்ச்சியான போராட்டத்தின் வழியாக அரசியலமைப்பு சட்டம் மாறியதோ அதை போலத்தான் இ.வி.எம்.கள் பழுதடைந்தது தெரிந்தால் அந்த தேர்தல் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்ற ஒரு சட்டம் வரும். உச்ச நீதிமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ வரும் காலங்களில் அதுபோன்ற ஒரு தீர்ப்பை சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இதற்கு பிறகு இந்த ஐந்து மெஷின்களில் எப்படி குறைபாடுகள் இருக்கிறது உட்பட 18 கேள்விகளை எழுப்பி நாங்கள் தேர்தல் ஆணயத்திற்கு ஐந்தாம் தேதியே கடிதம் கொடுத்திருக்கிறோம் அதற்கும் இன்னும் பதில் வரவில்லை. ஒரு கம்ப்யூட்டர் 100% சரியாக இயங்குகிறது என்றால் சிக்மா லெவல் 100% சரியாக இயங்குகிறது என்று சொல்வார்கள். ஆனால் தேர்தல் ஆணையமே தன்னுடைய இணையதளத்தில் இந்த இ.வி.எம். மெஷின்கள் 4 சிக்மா லெவலில் தான் அதனுடைய நம்பகத்தன்மை இருக்கிறது என்று சொல்லியிருக்கிறது.
அதாவது ஒரு லட்சம் ஓட்டு போட்டால் அதுல ஏறக்குறைய 1600 வாக்குகள் சரியாக பதிவிடாமல் போகலாம் என்ற ஒரு நிலைதான் இருப்பதாக தேர்தல் ஆணையமே சொல்லியிருக்கிறது. இதையெல்லாம் நாங்கள் கழக தலைவர் எப்படி சொல்கிறாரோ அப்படி சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கை தொடர்ந்து எடுத்து செல்வோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.