

சென்னை,
ஏற்கெனவே உள்ள 2 தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.11.12 கோடிக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த நவம்பர் 17-ஆம் தேதி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரியைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, தமிழகத்தில் புதிய விரைவுச் சாலைகளை அமைக்க வேண்டும் என்றும், சென்னை, கோவை மற்றும் தூத்துக்குடியை இணைக்கும் வகையில் மாநில அரசு முன்மொழிந்த தொழில் வழித்தடத் திட்டங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதுதொடர்பாக இரு அமைச்சர்களுக்கும் இடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில அரசு முன்மொழிந்த தொழில் வழித்தடத் திட்டங்களுக்கு உதவ மறுத்த மத்திய அரசு, அத்திட்டங்களை மாநில அரசே முழுமையாகச் செயல்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் மொத்தம் 339 கி.மீ. நீளமுள்ள 2 தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, தேசிய நெடுஞ்சாலை எண் 44 (என்.எச்.44) பிரிவில் உள்ள தருமபுரி-கரூர்-திண்டுக்கல்-சமயநல்லூர் வரையிலான 4 வழிச்சாலை, 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
அதேபோல், தேசிய நெடுஞ்சாலை எண் 744ஏ பிரிவில் உள்ள மதுரை புறவழிச்சாலையின் 2-ஆம் கட்டம் 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. மேலும், தாமரைப்பட்டி முதல் டி.புதுப்பட்டி வரையிலான இணைப்புச் சாலையும் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இந்தச் சாலை விரிவாக்கப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.11.12 கோடிக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்ட அறிக்கையைத் தயாரிக்க உள்ளது.
இதனால், சிங்கப்பெருமாள்கோவில் முதல் மதுரை வரையிலான புதிய பசுமை விரைவுச் சாலைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய பசுமை விரைவுச் சாலைத் திட்டத்துக்குப் பதிலாக, தற்போது பயன்பாட்டில் உள்ள செங்கல்பட்டு முதல் மதுரை வரையிலான ஜி.எஸ்.டி. சாலையை 8 வழிச்சாலையாகவும், மதுரை முதல் கன்னியாகுமரி வரையிலான சாலையை 6 வழிச்சாலையாகவும் அகலப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே நடைபெற்று வரும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக வங்கிகளில் அதிக அளவில் கடன் வாங்கியிருப்பது, சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை மற்றும் விக்கிரவாண்டி-தஞ்சாவூர் 4 வழிச்சாலை போன்ற முக்கியத் திட்டங்களில் ஏற்படும் தாமதம் ஆகியவை மத்திய அரசின் இந்த முடிவுக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
மேலும், சாலை அமைப்பதற்குத் தேவையான மண் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடிப்பதும் திட்டப் பணிகளைப் பாதித்து வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளின் 5 முக்கிய நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதற்காக, மாநில நெடுஞ்சாலைத் துறையுடன் இணைந்து உரிய திட்டங்களைத் தயாரிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு மத்திய மந்திரி நிதின் கட்கரி அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.