நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எழுப்பிய பிரச்சினைகள் குறித்த விளக்க கூட்டங்கள் - மாணிக்கம் தாகூர் அறிவிப்பு

‘டவுன் ஹால்” என்ற தலைப்பில் விளக்க கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.
மாணிக்கம் தாகூர்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்தியா கூட்டணி கட்சியினர் எழுப்பிய பிரச்சினைகள் குறித்தும் அதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்தும் விளக்க கூட்டங்கள் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 20ம்தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ம்தேதி வரை நடைபெற்றபோது, மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து தலைவர் ராகுல்காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியோ, உள்துறை மந்திரி அமித்ஷாவோ பதில் தர முன்வரவில்லை.

குறிப்பாக, தலைநகர் டெல்லியில், நீட் வினாத்தாள் கசிவு குறித்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது காவல்துறையினர் பெல்லட் துப்பாக்கி குண்டுகளை ஏவி, தடியடி நடத்திட யார் உத்தரவிட்டார்கள் என்ற கேள்விக்கு நாடாளுமன்ற கூட்டத் தொடர் முழுவதும் பிரதமரோ, உள்துறை மந்திரியோ பதில் தர முன்வரவில்லை. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இந்தியா கூட்டணி கட்சியினர் எழுப்பிய பிரச்சினைகள் குறித்தும் அதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்தும் தமிழக மக்களிடையே விளக்குவதற்கு, மாநகரங்களில் ‘டவுன் ஹால்” என்ற தலைப்பில் விளக்க கூட்டங்கள் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதன்படி, 7 மாநகரங்களில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கீழ்க்கண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள்.

22.08.2026 அன்று காலை 11 மணிக்கு கோவையில் நடைபெறும் கூட்டத்தில் கே. சுப்பராயன், எஸ். ஜோதிமணி, விஜய் வசந்த்

23.08.2026 அன்று மாலை 3 மணிக்கு திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் துரை வைகோ, செல்வராஜ், கிறிஸ்டோபர் திலக்

24.08.2026 அன்று காலை 11 மணிக்கு திருநெல்வேலியில் நடைபெறும் கூட்டத்தில் கார்த்தி ப. சிதம்பரம், துரை வைகோ, சி. ராபர்ட் புரூஸ்

27.08.2026 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் ப. சிதம்பரம், எஸ். ரவிக்குமார், பிரவீன் சக்கரவர்த்தி

28.08.2026 அன்று காலை 11 மணிக்கு வேலூரில் நடைபெறும் கூட்டத்தில் சசிகாந்த் செந்தில், வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன்

29.08.2026 அன்று காலை 11 மணிக்கு சேலத்தில் நடைபெறும் கூட்டத்தில் சச்சிதானந்தம், டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத்

29.09.2026 அன்று காலை 11 மணிக்கு மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் ப. சிதம்பரம், சு. வெங்கடேசன், நவாஸ்கனி

மாநகரங்களில் நடைபெறும் டவுன் ஹால் கூட்டங்களை அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் இந்தியா கூட்டணி கட்சியினரோடு இணைந்து கூட்டம் சிறப்பாக நடத்திட ஒருங்கிணைப்புப் பணிகளை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இக்கூட்டங்களை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் நாட்டின் நலனிலும், மக்கள் பிரச்சினைகளிலும் நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் எந்த அளவிற்கு சர்வாதிகார, ஜனநாயக உணர்வில்லாத பா.ஜ.க.வினரோடு எத்தகைய போராட்டங்களை நடத்தினார்கள் என்பதை தமிழக மக்கள் அறிவதற்கு மிகச் சிறந்த வாய்ப்பாக இக்கூட்டங்கள் அமைய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com