

சென்னை,
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, சென்னையின் பாரம்பரியமிக்க பகுதியான மயிலாப்பூரில் கொலு பொம்மைகளின் விற்பனை விறுவிறுப்பாக களைகட்டியுள்ளது. கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் அணிவகுத்து நிற்கும் விதவிதமான வண்ணப் பொம்மைகள் பொதுமக்களையும் பக்தர்களையும் பெரிதும் கவர்ந்து வருகின்றன.
நவராத்திரி பண்டிகை, நடப்பு ஆண்டில் வருகின்ற 11-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரையிலான 9 நாட்கள் கொண்டாடப்படும். இந்த விழாவில் பொதுமக்கள் தங்கள் வீட்டில் கொலு பொம்மைகளை அடிக்கி வைத்து சாமி கும்பிட்டு மகிழ்ச்சியடைவர். இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பண்டிகையின் போது மயிலாப்பூர் மாடவீதிகள் பொம்மைச் சந்தையாக மாறுவது வழக்கம். இந்த ஆண்டும், பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சாலையின் இருபுறமும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான பொம்மைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு விற்பனையில், வழக்கமான அம்மன் சிலைகள், தசாவதாரம், அஷ்டலட்சுமி செட்கள் மற்றும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளுடன், பல்வேறு புதுமையான வடிவங்களிலான பிள்ளையார் சிலைகளும், ஆன்மீகக் கதைகளை விளக்கும் பொம்மைத் தொகுப்புகளும் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, கொல்கத்தா மற்றும் உள்ளூர் கைவினைஞர்களால் களிமண் மற்றும் காகிதக் கூழ் மூலம் நேர்த்தியாக செய்யப்பட்டு, கண்கவர் வண்ணங்கள் தீட்டப்பட்ட பொம்மைகள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
சாமானிய மக்கள் முதல் அனைவரும் வாங்கும் வகையில், சிறிய அளவிலான பொம்மைகள் ரூ. 100 முதல் விற்பனை செய்யப்படுகின்றன. பொம்மைகளின் அளவு, வேலைப்பாடு மற்றும் தரத்திற்கு ஏற்ப விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மாடவீதிகளில் குடும்பம் குடும்பமாக வரும் பொதுமக்கள், தங்களுக்குப் பிடித்தமான பொம்மைகளை ஆர்வத்துடன் பேரம் பேசி வாங்கிச் செல்கின்றனர்.
இதனால் இப்பகுதியில் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. மாடவீதிகள் மட்டுமின்றி, சென்னை அண்ணா சாலையில் உள்ள புகழ்பெற்ற பூம்புகார் விற்பனை நிலையத்திலும் சிறப்பு நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.