குழந்தைகள் பாதுகாப்பு முதல் தொழில் முதலீடுகள் வரை அனைத்திலும் தோல்வி - டிடிவி தினகரன்

கடந்த ஆறு மாத காலத்தில் தமிழகத்தில் எத்தனை நண்பா நண்பீஸ் காணாமல் போயுள்ளனர் என்பதை பற்றி முதல்-அமைச்சர் பேசினாரா? என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
Published on: 

சென்னை,

குழந்தைகள் பாதுகாப்பு முதல் தொழில் முதலீடுகள் வரை அனைத்திலும் தோல்வி; ஊழல் புகார்கள் மீதும் நடவடிக்கை இல்லை – ஆறு மாத ஆட்சியின் அவலங்களை மறைக்க அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைக்கும் முதல்-அமைச்சர் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தவெக நிகழ்ச்சி

தவெக நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் குழந்தைகளைப் பார்த்து, “நண்பா... நண்பி" பேச ஆரம்பித்தவர், கடந்த ஆறு மாத காலத்தில் தமிழகத்தில் எத்தனை நண்பா நண்பிகள் காணாமல் போயுள்ளனர் என்பதை பற்றி பேசினாரா? செஞ்சியை சேர்ந்த சிறுமி மாயமாகி 40 நாட்கள் கடந்தும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், தவெக ஆட்சிக்கு வந்த கடந்த ஆறு மாத காலத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக வரும் செய்திகள் பற்றி முதல்-அமைச்சர் எடுத்த நடவடிக்கைதான் என்ன?

நடவடிக்கைகள் என்ன?

தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள குழந்தைகளிடம் "ஐயோ, வந்துட்டாரே... கலாய்ப்பாரே!" என தனியார் நிகழ்ச்சி வசனங்களை பேசி புளகாங்கிதம் அடைந்த முதல்-அமைச்சர், தனது அரசின் மீதான சேதங்களை கட்டுப்படுத்த அவ்வப்போது நடத்தி வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கூட ஆக்கப்பூர்வமான திட்டங்கள் குறித்து பேசாமல், வாய்மூடி மௌனியாக இருந்தது ஏன்? தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு செல்லும் நிலையில், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? குழந்தைகளை ஏமாற்றுவது எளிது தொழில் முதலீட்டாளர்களை ஏமாற்றுவது கடினம் என்பதை உணர்ந்து விட்டாரா?

குற்றவாளிகள்தானே?

பள்ளி குழந்தைகளை அழைத்து, நன்றாக படித்து உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்று அறிவுரை வழங்கும் முதல்-அமைச்சர், தன்னால் தேடித்தேடி கண்டுபிடிக்கப்பட்ட தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், அவ்வாறு படித்து உயர்ந்த பதவி வகிக்கும் அதிகாரியின் கண்ணியத்திற்குக் களங்கம் ஏற்படுத்தி, அவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய கேவலத்தை அறிந்திருந்தும், கடந்த நான்கு மாதங்களாக வாய்மூடி, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அவரை நீங்களும் உங்களது அமைச்சரவை சகாக்களும் பாதுகாத்து வருவது கேவலத்திலும் கேவலம் என்பதை உணராமல், தற்போது மேடையில் நீட்டி முழங்குவதற்கு வெட்கமாக இல்லையா? தவறு செய்பவன் குற்றவாளி என்றால், அவனை பாதுகாப்பவர்களும் சட்டத்தின் முன் குற்றவாளிகள்தானே?

விசாரித்திருப்பாரா?

எந்த துறையில் தவறு நடந்தாலும் அது தவறுதான் என பேசிய முதல்-அமைச்சர், தனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை உட்பட தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் நடைபெறும் ஊழல் மற்றும் முறைகேடு புகார்களை ஒருமுறையாவது விசாரித்திருப்பாரா?

சன்னரக அரிசி

அரசு வழக்கறிஞர் பதவிக்கு லஞ்சம் வாங்கியதாக நீதிமன்றத்தால் குட்டு வாங்கியது, மின் கொள்முதல் தொடங்கி மிதிவண்டி கொள்முதல் வரை அதிக விலைக்கு டெண்டர் அறிவித்து, அதன் மீது கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்தவுடன் டெண்டரை மாற்றியமைத்தது, நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் சன்ன ரக அரிசி வழங்குவதாக அறிவித்துவிட்டு, பின்னர் வழக்கமாக வழங்கும் இலவச ரேஷன் அரிசியையே பாலிஷ் செய்து விற்றது, இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி ரூபாய் வரை பேரம் பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரைப் பாதுகாத்து வருவது, 50 லட்சம் ரூபாய்க்கு கீழுள்ள டெண்டர்களை இணையவழி டெண்டர்களாக வெளியிடாமல், கொட்டேஷன் முறையில் வழங்கலாம் என அறிவித்து ஊழலுக்கு வழிவகுப்பது, முதல்-அமைச்சருக்காக கடலை பார்த்தபடி பத்தாவது மாடியில் அமைக்கப்படும் புதிய அறைக்கு, டெண்டர் விடுவதற்கு முன்பே பணிகளை தொடங்கி, கேள்விகள் எழுந்ததும் டெண்டர் இறுதி செய்யப்படவில்லை என சட்டமன்றத்தில் கூறிவிட்டு, பின்னர் புதிய டெண்டர் அறிவித்தது.

தூய சக்தி

முதல்-மைச்சரின் துறையிலேயே தாம்பரம் மாநகராட்சியில் முடிக்கப்பட்ட பணிக்கு மீண்டும் டெண்டர் விட்டு வசூல் செய்தது, அதில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிக்கு மேலும் உயர் பதவி வழங்கி அழகு பார்ப்பது என, ஊழல்களை ஒழிக்க வந்த தூய சக்தி என தம்பட்டம் அடித்தவர்கள், ஆறே மாதங்களில் ஊழல்கள் ஊறிப்போன துர்நாற்ற சக்தியாக அம்பலப்பட்டுள்ளனர்.

வசனம் பேசுவதால் என்ன பயன்?

குடிநீர், கழிவறைகள், சுற்றுச்சுவர்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாத அரசு பள்ளிகள், தரமும் சுகாதாரமும் அற்ற நிலையில் வழங்கப்படும் மதிய உணவுகள், ஆசிரியர்கள் பற்றாக்குறை என ஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளும் அவலநிலையில் காட்சியளிக்கும் சூழலில், அவற்றை சரிசெய்ய கடந்த ஆறு மாதங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதைப் பற்றி கூறாமல், “நல்லதே நடக்கும்; கான்பிடன்ட்டாக இருங்கள்” என்று வசனம் பேசுவதால் என்ன பயன்?

பாலியல் குற்றங்கள்

தான் அரசியலுக்கு வந்தது உங்களின் ஒவ்வொரு குடும்பத்திற்காகவும், குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்காகவும் என தொலைக்காட்சிகளில் இரவு நேரங்களில் ஒளிபரப்பாகும் மெகா சீரியல் இயக்குநர்களே வியக்கும் அளவிற்கு, திரைக்கதையை எழுதி வாசித்துக்கொண்டிருந்த முதல்-அமைச்சருக்கு, அந்த ஒவ்வொரு குடும்பமும் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு வருவதும், "தவெகவும் பாலியல் குற்றங்களும்" என்ற தலைப்பில் புத்தகமே எழுதலாம் என்ற அளவிற்கு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தொடர் கொலை, கொள்ளைகள், போதைப் பொருட்களின் பதுக்கல் மற்றும் விற்பனை, சிறை கைதிகள் தப்பியோட்டம் எனச் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கால் ஒவ்வொரு நாளும் உயிர் பயத்தோடு அஞ்சி வாழ்ந்து வருவதும் தெரியாமல் போனது ஏனோ?

கவலை இல்லை

மொத்தத்தில் நேற்று முதல்-ஆமைச்சர் பேசிய பொய்களுக்கு மத்தியில் "யார் என்ன சொன்னாலும் தனக்கு கவலை இல்லை" என்ற உண்மையை பேசி தமிழ்நாடு எக்கேடு கெட்டாலும், தமிழக மக்கள் எப்படி போய் தொலைந்தாலும் எனக்கென்ன என ஒப்புக்கொண்டுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X