

சென்னை,
கூட்டுறவு சங்க பணியாளர்களின் குடும்பத்தினர் பெற்றுள்ள விவசாய பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில், கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களின் குடும்பத்தினர் பெற்றுள்ள விவசாய பயிர்க்கடன்களுக்கு தள்ளுபடி வழங்க தகுதியில்லை எனக் குறிப்பிடப்பட்டிருப்பது, கூட்டுறவு துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பணியாளர்களின் குடும்பத்தினரிடையே பெரும் ஏமாற்றத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு இயக்கம் என்பது கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் அடித்தளமாக விளங்கும் ஒரு முக்கியமான அமைப்பாகும். கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களில் பெரும்பாலானோர் கிராமப்புற பின்னணியை கொண்டவர்கள். அவர்களுடைய குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக விவசாயத்தை மட்டுமே பிரதான வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றன.
குறிப்பாக, கூட்டுறவு சங்க பணியாளர்களின் தாய், தந்தையர், சகோதரர்கள், சகோதரிகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இன்றளவும் விவசாய தொழிலில் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர். சிறு மற்றும் குறு விவசாயிகளாக தங்களுக்கு சொந்தமான நிலங்களிலும், குத்தகை நிலங்களிலும் விவசாயம் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலமாக முறையாக பயிர்க்கடன் பெற்று சாகுபடி செய்து வருகின்றனர். இவர்களுடைய விவசாய வருமானத்திற்கும், கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் குடும்ப உறுப்பினர்களின் பணிக்கும் எந்தவிதமான நேரடி தொடர்பும் இல்லை. குடும்பத்தில் ஒருவர் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிகிறார் என்பதற்காக, மற்ற குடும்ப உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் விவசாயத்தின் உரிமைகளையும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு நலத்திட்ட பயன்களையும் மறுப்பது எவ்வகையிலும் நியாயமானதாக இருக்காது.
அரசு பணிகளில் பணிபுரியும் நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் விவசாய கடன் பெற்றிருந்தால், உரிய தகுதி மற்றும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கடன் தள்ளுபடி வழங்கப்படும் நிலையில், கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு மட்டும் இத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்படுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் குடும்பத்தினர் விவசாயிகள் இல்லையா? கூட்டுறவுத் துறையில் பணிபுரிவதால் மட்டுமே ஒருவரின் குடும்பத்தினர் விவசாய கடன் தள்ளுபடிக்கு தகுதியற்றவர்கள் என்று கருதுவது, அந்த குடும்பங்களின் உண்மையான வாழ்வாதார நிலையை புரிந்துகொள்ளாமல் எடுக்கப்பட்ட முடிவாகவே பார்க்க வேண்டியுள்ளது.
விவசாயம் என்பது ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரம் மட்டுமல்ல அது தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் வாழ்க்கை முறையாகும். மேலும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களின் குடும்பங்களில் பெரும்பாலானோர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். சிறு, குறு விவசாயிகளாக விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
பருவமழை பொய்த்தல், இயற்கைச் சீற்றங்கள், விளைபொருட்களின் விலை வீழ்ச்சி, உரம் மற்றும் இடுபொருட்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், அரசின் விவசாய கடன் தள்ளுபடி திட்டம் அவர்களுக்கும் நம்பிக்கையையும், நிவாரணத்தையும் அளிக்க வேண்டிய நிலையில், கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் குடும்ப உறுப்பினர்களை காரணம் காட்டி அவர்களுக்கான தள்ளுபடி வாய்ப்பு மறுக்கப்படுவது அவர்களின் பொருளாதார சுமையை மேலும் அதிகரிக்கும்.
அரசின் நலத்திட்டங்கள் தகுதியின் அடிப்படையில் சென்றடைய வேண்டுமே தவிர, ஒருவரின் குடும்ப உறுப்பினர் எந்த துறையில் பணிபுரிகிறார் என்பதன் அடிப்படையில் மறுக்கப்பட கூடாது. எனவே தமிழ்நாடு முதல-அமைச்சர் இப்பிரச்சினையை தனி கவனத்தில் எடுத்துக்கொண்டு, கூட்டுறவு சங்க பணியாளர்களின் குடும்பத்தினர் பெற்றுள்ள விவசாய பயிர்க்கடன்கள் தொடர்பான தற்போதைய தகுதி நீக்க விதிமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.