

தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்த சிங்கத்துரை (வயது 47), லாரி டிரைவர். அவருடைய மனைவி பிரியங்கா(35). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து சிங்கத்துரை தனது வீட்டின் மேல்தளத்தில் தனியாக வசித்து வந்தார். கீழ்தளத்தில் பிரியங்கா, தனது மகன், மகளுடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த பிரியங்கா, இரவு 11 மணிக்கு மேல் தாமதமாக திரும்பி வந்துள்ளார். அப்போது சிங்கத்துரை, 'எங்கே சென்றுவிட்டு வருகிறாய்?' என்று பிரியங்காவிடம் கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிங்கத்துரை, தனது மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த பிரியங்கா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அதன்பிறகு சிங்கத்துரை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிங்கத்துரையை தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியை சேர்ந்தவர் ஹரிபிரசாத்(31). இவருடைய மனைவி கீர்த்திகா(27). இவர்கள் இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு நேற்று முன்தினம் இரவு ஹரிபிரசாத் கீர்த்திகாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கீர்த்திகாவை அவரது பெற்றோர் அரப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். நேற்று காலை கீர்த்திகா, தாயார் விஜயாவுடன் சத்துவாச்சாரியில் உள்ள திருமண தகவல் மையத்துக்கு நேற்று சென்றார். அங்கு பட்டாக்கத்தியுடன் புகுந்த ஹரிபிரசாத், கீர்த்திகாவின் முகம், கழுத்தில் சரமாரியாக வெட்டினார். தடுக்க முயன்ற விஜயாவுக்கும் கையில் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த கீர்த்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் ரத்தம் சொட்டிய பட்டாக்கத்தியுடன் போலீஸ் நிலையத்தில் ஹரிபிரசாத் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், ஆலாந்துறை அருகே உள்ள முட்டத்துவயலை சேர்ந்தவர் மீனாட்சி(60). இவரது மகன் ஆனந்தபாபு(38), தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கல்பனா(29) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்களது திருமணத்தில் மீனாட்சிக்கு விருப்பம் இல்லை. இதனால் குடும்பத்தினர் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு ஆனந்தபாபு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது தாய்-மகன் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்தபாபு, கத்தியால் மீனாட்சியை சரமாரியாக குத்தினார். இதில் மீனாட்சி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றிய புகாரின் பேரில் ஆனந்தபாபுவையும், கல்பனாவையும் போலீசார் கைது செய்தனர்.