

சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று அறிவிப்பு வெளியிட்டார். இதனை திரும்பப் பெற வலியுறுத்தி அறவழி போராட்டம் நடத்தப்படும் என்று அவருடைய ரசிகர்கள் சிலர் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தென் சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன், மன்ற நிர்வாகிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரஜினிகாந்த் தனது உடல் நலத்தை கருத்தில் கொண்டு தேர்தல் அரசியலுக்கு தற்போது வரவில்லை என்ற அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். அவருடைய அறிக்கையை திரும்பப்பெற செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் சில ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வரும் 10-ந்தேதி அறவழிப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அந்த அறவழி போராட்டத்துக்கு தலைமை மன்றம் அனுமதி அளிக்கவில்லை. எந்த நிர்வாகியும் அந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம்.
கடந்த முறை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரஜினிகாந்த் அவரது உடல் நிலை குறித்து விரிவாக அனைத்து மாவட்ட செயலாளர்களிடமும் விவரித்தார். அதனை ஏற்றுக்கொண்டு நமது தலைவர் எடுக்கும் எந்த முடிவுக்கும் முழு ஒத்துழைப்பு தருவதாகவும், கட்டுப்பட்டு உடன் நிற்போம் என்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களும் ஒருமனதாக உறுதியளித்தனர். எனவே நாம் அனைவரும் தலைவரின் முடிவுக்கு கட்டுப்பட்டு அவரிடமிருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை பொறுமை காக்கவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.