பிறந்தநாள் விழாவில் பிரியாணி சாப்பிட்ட விவசாயி உயிரிழப்பு.. பலர் மருத்துவமனையில் அனுமதி


பிறந்தநாள் விழாவில் பிரியாணி சாப்பிட்ட விவசாயி உயிரிழப்பு.. பலர் மருத்துவமனையில் அனுமதி
x

பிரியாணி சாப்பிட்டவர்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை


புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், ஏம்பல் அருகே ஒரு வயது குழந்தைக்கு பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சைவ, அசைவ உணவு வழங்கப்பட்டது.

இதில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டது. இதையடுத்து சிலர் அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதில் சிகிச்சைக்கு செல்லாமல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வேளாணி பகுதியை சேர்ந்த விவசாயி கருப்பையா (70) என்பவர் திடீரென பரிதாபமாக இறந்தார்.

முன்னதாக விழாவில் கலந்து கொண்டு அசைவ உணவு சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்டோர் ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காரைக்குடி தனியார் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் குறித்து சுகாதாரத் துறையினர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவுகளை ஆய்வுக்காக மாதிரி எடுக்க பிறந்தநாள் நடைபெற்ற வீட்டிற்கு சென்றனர். ஆனால் உணவு தயாரிக்கப்பட்டு மறுநாள் ஆனதால் அது அனைத்தும் கெட்டுப் போய்விட்டது. இதையடுத்து பிறந்த நாளுக்கு வெட்டப்பட்ட கேக்கை மட்டும் பரிசோதனைக்காக அவர்கள் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

1 More update

Next Story