விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் - அண்ணாமலை

விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.
அண்ணாமலை
Published on

சென்னை,

வீ த லீடர்ஸ் (We The Leaders) இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் போராட்டம்

தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், தற்போது ரூ.75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று அறிவித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக, தங்களைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

கடந்த 1970 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து, மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டனர். 56 ஆண்டுகள் கடந்தும், அதே நாளில், மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக தங்களையே வருத்திக் கொள்ளும் நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது.

முழுமையான தள்ளுபடி

கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் கடமை. இது போன்று கடந்த ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது.

உடனடியாக, தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com