

காஞ்சீபுரம்,
சொத்தை ஆசிரமத்துக்கு எழுதி வைத்து விடுவேன் என்று மிரட்டியதால் தந்தையை வெட்டிக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த தாயும் கைது செய்யப்பட்டார்.
சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் சிவபாதம் (வயது 70). அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ரேணுகா (50). மகன் மதுசூதனன் (39). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனியார் கப்பல் நிறுவனத்தில் வேலை செய்தார். மதுசூதனனுக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக பெருங்குடி பழைய மாமல்லபுரம் சாலையில் பல்வேறு இடங்களில் வீடுகள் உள்ளன.
இந்த நிலையில் மதுசூதனன் தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பெருங்குடியில் உள்ள வீட்டுக்கு வந்து பெற்றோர் மற்றும் மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார். வாடகைக்கு விட்ட வீடுகளில் இருந்து வந்த வடகை பணம் மூலம் மதுசூதனன் குடும்பம் நடத்தி வந்தார். இதற்கிடையே சிவபாதம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவம் உள்ளிட்ட செலவுகள் அதிகமானது. இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு முன் குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்ட நிலையில் சிவபாதம், வாலாஜாபாத் அடுத்த மருதம் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்து தனியாக வசித்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு மருதம் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு கிரகபிரவேசத்துக்காக ரேணுகா, மதுசூதனன் இருவரும் வந்தனர். அப்போது சிவபாதத்திடம் எதற்காக இங்கு தங்கி இருக்கிறீர்கள், தேவையில்லாமல் அதிக செலவு செய்கிறீர்கள், சென்னைக்கு வந்துவிட்டால் இது போன்ற பிரச்சினை வராது என்று அழைத்தனர். அதற்கு சிவபாதம் மறுத்து விட்டார். சென்னை வீட்டில் இருந்து வரும் வாடகை பணத்தை கொடுங்கள். எனது செலவுக்கு பயன் படுத்தி கொள்கிறேன் என்று கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் நீங்கள் எனக்கு செலவுக்கு பணம் தரவில்லை என்றால் எனது பெயரில் உள்ள அனைத்து சொத்துகளையும் அனாதை ஆசிரமத்துக்கு எழுதி வைத்து விடுவேன் என சிவபாதம் மிரட்டினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவபாதம் மாரடைப்பால் இறந்து விட்டார் என்று கூறி இறுதி சடங்குகள் முடிந்து உடலை எரியூட்டுவதற்காக எடுத்து சென்றனர். சிவபாதத்தின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக வாலாஜாபாத் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிவபாதத்தின் உடலில் வெட்டு காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் சந்தேகத்தின்பேரில் சிவபாதத்தின் மனைவி ரேணுகா மற்றும் மகன் மதுசூதனன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணயில் நேற்று முன்தினம் மதுசூதனன் தந்தையை கால் மற்றும் கழுத்து பகுதியில் கத்தியால் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும் தாய் ரேணுகா வீட்டிலும் கணவரின் மீதும் படிந்திருந்த ரத்தக்கறையை துடைத்து அப்புறப்படுத்தி விட்டு அவர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்று கூறி உறவினர்களை நம்ப வைத்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ரேணுகாவையும் மதுசூதனனையும் கைது செய்தனர்.