

சென்னை,
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, தேவையற்ற விளம்பர நாடகம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
அனைத்து மதங்களைச் சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் (NGOs) வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும், 'வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா' (FCRA)-2026க்கு எதிராக, ஜோசப் விஜய்யின் தலைமையிலான அரசு தனித்தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, தேவையற்ற விளம்பர நாடகம்.
காரணம், இச்சட்டம் காங்கிரஸ் ஆட்சிக்காலமான 1976-ல் கொண்டு வரப்பட்டு, அந்தந்த கால மாற்றங்களுக்கு ஏற்ப 2010, 2016, 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது ஏதோ மத்திய பாஜக-வால் கொண்டு வரப்பட்ட புதிய சட்டம் போலவும், சிறுபான்மையின மக்களின் NGO-க்களுக்கு வரும் நிதியை முடக்கும் சட்டம் போலவும் தவெக அரசு ஒரு போலி பிம்பத்தை கட்டமைக்க முயல்வது கண்டனத்திற்குரியது.
மேலும், NGO-க்களை முறையாக பதிவு செய்வது. விதிமுறைகளின்படி நிதியுதவி பெறுவது, வரவு-செலவுகளுக்கான அறிக்கையை வெளியிடுவது உள்ளிட்ட விதிமுறைகளைத்தான் தற்போதைய மசோதா முன்மொழிகிறதே தவிர, NGO-க்களின் நிதியுதவியை முடக்குவதற்கான எந்த முகாந்திரமும் இதில் இல்லை. சமூக நலனுக்காக வழங்கப்படும் நிதியுதவி, சரியான நோக்கத்திற்காக மட்டுமே செலவழிக்கப்பட வேண்டும் என்பது தான் FCRA-வின் முக்கிய நோக்கம்.
அதுமட்டுமன்றி ஓர் அமைப்பின் பதிவு ரத்து செய்யப்பட்டால், அதன் வெளிநாட்டு பங்களிப்புகளும், அதன் மூலம் உருவான சொத்துக்களும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்ற 2010-ன் விதியை திருத்தி, ரத்து செய்யப்பட்ட அமைப்பு தனது பதிவை மீண்டும் மீட்டெடுக்கும் பட்சத்தில் அனைத்து சொத்துக்களும், பயன்படுத்தப்படாத நிதிகளும் முழுமையாகத் திருப்பித் தரப்படும் என்பதை உறுதி செய்கிறது FCRA-வின் புதிய திருத்த மசோதா.
எனவே, தேசப் பாதுகாப்பையும், தொண்டு நிறுவனங்களின் சமூகப் பாதுகாப்பையும் ஒருசேர உறுதி செய்யும் FCRA-2026 திருத்த மசோதாவை, தங்களின் வாக்கரசியலுக்காக கண்மூடித்தனமாக எதிர்க்கும் போக்கை மாற்றுக் கட்சியினர் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.