தமிழக பட்ஜெட்டில் சமர்ப்பிக்கப்படும் வெள்ளை அறிக்கையில் உள்ள அம்சங்கள்

தமிழக பட்ஜெட்டில் சமர்ப்பிக்கப்படும் வெள்ளை அறிக்கையில் இடம் பெறவுள்ள அம்சங்கள் என்னென்ன என்பது பற்றி காணலாம்.
தமிழக பட்ஜெட்டில் சமர்ப்பிக்கப்படும் வெள்ளை அறிக்கையில் உள்ள அம்சங்கள்
Published on

சென்னை,

தமிழக அரசின் பட்ஜெட் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதில் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. மாநில அரசின் நிதி நிலைமையை வெளிச்சம் போட்டுக்காட்டும் அந்த அறிக்கையில் எது போன்ற அம்சங்கள் இடம் பெறும் என்பதை தற்போது விரிவாக பார்க்கலாம்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமர்ப்பிக்க உள்ள வெள்ளை அறிக்கையில் கடந்த 2006ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற போது இருந்த நிதி நிலையிலிருந்து தற்போதுள்ள சூழல் வரை முழுமையான விவரங்கள் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2011ம் ஆண்டு திமுக அரசு பதவியிலிருந்து வெளியேறும் போது மாநிலத்தின் கடன் 1 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாகவும் அடுத்து அதிமுக அரசு பொறுப்பேற்று பத்தே ஆண்டுகளில் இக்கடன் 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து விட்டதாகவும் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, பணமதிப்பு நீக்கம் மற்றும் அதனை தொடர்ந்து வந்த ஜிஎஸ்டி ஆகியவற்றால் மாநில அரசின் நிதி நிலை வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா காரணமாக அரசின் செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ளது.

இக்காலகட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் 14 வகை பொருட்கள் அடங்கிய பை தருவதற்காக மட்டும் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 3 சதவிகிதத்திற்குள் இருக்க வேண்டும் என்ற வரையறையை அரசு கடந்து விட்டது என்றார்.

அரசின் நிதிநிலை தவிர மின் வாரியம், போக்குவரத்துக்கழகங்கள் உள்ளிட்ட அரசு நடத்தும் நிறுவனங்களின் நிதி நிலை விவரங்களும் வெள்ளை அறிக்கையில் இடம் பெற உள்ளது. மோசமாக உள்ள நிதி சூழலை சரி செய்வது எப்படி என்பது தொடர்பான அறிவிப்புகளும் வெள்ளை அறிக்கையில் இடம் பெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com