

சென்னை,
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவ படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்து தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இதன்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2026-2027, 2027-2028, 2028-2029 ஆகிய 3 கல்வியாண்டுகளுக்கான துணை மருத்துவ படிப்புகளுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிப்ளமோ சுகாதார ஆய்வாளர், சானிட்டரி இன்ஸ்பெக்டர் படிப்பிற்கு அரசு ஒதுக்கீட்டிற்கு ரூ.35 ஆயிரமும், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூ. 70 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிப்ளமோ நர்சிங் பொதுபாடத்திற்கு அரசு ஒதுக்கீட்டிற்கு ரூ.35 ஆயிரமும், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூ.75 ஆயிரமும், துணை செவிலியர் மகப்பேறு பட்டயப் படிப்பு (diploma auxiliary nurse midwifery) அரசு ஒதுக்கீட்டிற்கு ரூ. 30 ஆயிரமும், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூ.60 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ பார்மசி அரசு ஒதுக்கீட்டிற்கு ரூ.25 ஆயிரமும், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூ.50 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்சி நர்சிங், போஸ்ட் பிஎஸ்சி நர்சிங் அரசு ஒதுக்கீட்டு கட்டணம் ரூ.60 ஆயிரமும், நிர்வாக ஒதுக்கீட்டு கட்டணம் ரூ. 1.20 லட்சம், பிபார்ம், பிபிடி, பிஓடி, பிபார்ம் லேட்டரல் என்டரி அரசு ஒதுக்கீட்டு கட்டணம் ரூ.50 ஆயிரம், நிர்வாக ஒதுக்கீட்டு கட்டணம் ரூபாய் 1 லட்சம், இளநிலை அலைடு ஹெல்த் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் ரூ. 50 ஆயிரம், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூபாய் 1 லட்சம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.