தீபாவளி சீட்டு நடத்தி ரூ.33 லட்சம் மோசடி செய்த பெண் போலீஸ்

கடலூரில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.33 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண் போலீஸ் கைது செய்யப்பட்டார்.
தீபாவளி சீட்டு நடத்தி ரூ.33 லட்சம் மோசடி செய்த பெண் போலீஸ்
Published on

கடலூர்,

கடலூர் புதுக்குப்பத்தை சேர்ந்த அனிதா என்பவர், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், பண்ருட்டி பக்கிரிப்பாளையத்தை சேர்ந்த பிரபு (வயது 42) என்பவர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதியில் பழைய தங்க நகைகள் வாங்கி விற்கும் கடை வைத்திருந்தார். மேலும் அவர் தீபாவளி சீட்டு நடத்தி, கடலூர் புதுக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் பணம் வசூலித்து வந்தார். ஆனால் சீட்டு முடிந்த பிறகு, பணம் கட்டியவர்களுக்கு தரவேண்டிய தங்ககாசு, பணம், பொருட்களை தரவில்லை. இதன் மூலம் சுமார் 270 பேரிடம் ரூ.33 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் பணம் கட்டியவர்கள், அவரிடம் சென்று பணத்தை கேட்டபோது கடையை மூடிவிட்டு சென்றுவிட்டார். பிரபுவுக்கு உடந்தையாக அவரது மனைவியான ஆயுதப்படை போலீஸ்காரர் கோமளாவும் (39) செயல்பட்டார். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தரவேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரித்து மோசடியில் ஈடுபட்ட பிரபுவை கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தனர். இந்நிலையில் பிரபுவுக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கோமளாவை, நேற்று குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தீபாவளி சீட்டு மோசடி வழக்கில் பெண் போலீஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com