இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்! - அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு

மாவட்ட வாரியான பட்டியல் இன்று காலையில் இருந்தே வெளியிடப்பட்டு வந்தது.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்! - அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடைசியாக 2003-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டன. 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, கடந்த ஆண்டு (2025) நவம்பர் மாதம் 4-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 14-ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்தப் பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பு, அக்டோபர் மாதம் 27-ந் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது, இறந்தவர்கள், இரட்டை பதிவு, முகவரி மாற்றம் போன்றவை கண்டறியப்பட்டு, அதில் உள்ள பெயர்கள் நீக்கப்பட்டன. அந்த வகையில், மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

வரைவு வாக்காளர் பட்டியல்

அதாவது, இறந்தவர்கள் 26 லட்சத்து 95 ஆயிரத்து 672 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேர், குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர் என கண்டறியப்பட்டு நீக்கப்பட்டனர். அதன்பிறகு, டிசம்பர் 19-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 43 லட்சம் பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கு அவகாசம் வழங்கப்பட்டது.

சுமார் 35 லட்சம் பேர் விண்ணப்பம்

அதன்படி, பட்டியலில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்ய 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என மொத்தம் 24 லட்சத்த 47 ஆயிரம் பேர் வாக்காளர் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர். அதேபோல், இணையதளம் வழியாக 10 லட்சத்து 28 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆக மொத்தம் 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த விண்ணப்பங்கள் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டன. இந்த பணிகள் கடந்த 10-ந் தேதி நிறைவடைந்தன.

காலையில் இருந்து மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தமிழகத்திற்கு ஒட்டுமொத்தமாக இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 5 கோடியே 67 லட்சத்து 07 ஆயிரத்து 380 வாக்காளர்கள் உள்ளனர். என்று அர்ச்சனா பட்நாயக் அறிவித்தார். இதில், ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 925 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 89 லட்சத்து 60 ஆயிரத்து 838 பேரும் , மூன்றாம் பாலினத்தவர் 7,617 பேரும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com