தடையில்லா சான்று வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: தீயணைப்பு அலுவலர் கைது

கட்டிடத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க உதவி தீயணைப்பு அலுவலர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
தடையில்லா சான்று வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: தீயணைப்பு அலுவலர் கைது
Published on: 

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையை சேர்ந்த கணேஷ் என்பவர் திருவண்ணாமலையில் புதிதாக மருத்துவமனை தொடங்க அதற்கான கட்டிடத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.

அவரிடம் மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் பணியாற்றி வரும் உதவி தீயணைப்பு அலுவலர் சரவணன் என்பவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத கணேஷ், இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் நேற்று திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்பிரசாத் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட போலீசார் விசாரணை நடத்தினர்.

அத்துடன் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சரவணன் கேட்ட லஞ்சப்பணத்தை வழங்க கணேஷிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். மாவட்ட தீயணைப்பு அலுவலகத்திற்கு சென்ற கணேஷ், போலீசார் கொடுத்த பணத்தை மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சரவணனிடம் வழங்கினார். அதை சரவணன் வாங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து லஞ்சம் பெற்ற உதவி தீயணைப்பு அலுவலர் சரவணனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com