

சென்னை,
சென்னை மதுரவாயல் பகுதியில் தண்ணீர் கம்பெனிக்குள் புகுந்த 7 அடி நீள நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர்.
சென்னை மதுரவாயல் வெங்கடேஸ்வராநகர், பாரதி சாலையில் செயல்பட்டு வரும் தண்ணீர் கம்பெனிக்குள் திடீரென 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது. தண்ணீர் கம்பெனியின் உரிமையாளர் சசிகுமார். பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக மதுரவாயல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கம்பெனிக்குள் பதுங்கியிருந்த பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது தீயணைப்பு வீரர்களை கண்ட நல்ல பாம்பு திடீரென தலையை உயர்த்தி படம் எடுத்தபடி நின்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் மிகவும் லாவகமாக செயல்பட்டு பாம்பை பாதுகாப்பாக பிடித்தனர். பின்னர் அதனை வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.