கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் - பிரக்ஞானந்தாவுக்கு எல்.முருகன் வாழ்த்து

பிரக்ஞானந்தா மேலும் பல உயரங்களைத் தொட்டு, இந்தியாவிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என எல்.முருகன் வாழ்த்தியுள்ளார்.
கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் - பிரக்ஞானந்தாவுக்கு எல்.முருகன் வாழ்த்து
Published on

சென்னை,

கிராண்ட் செஸ் தொடரின் இறுதி சுற்று அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்தது. இதன் இறுதிப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா- அமெரிக்க வீரர் பேபியானோ கருவானா மோதினர். இது 2 கிளாசிக்கல், 2 ரேபிட், 4 பிளிட்ஸ் ஆட்டங்கள் கொண்டதாகும்.

கிளாசிக்கல், ராபிட், பிலிட்ஸ் என மூன்று பிரிவு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா, நடப்பு சாம்பியன் பேபியானோ கருவானாவை 15-13 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றார். இதன் மூலம் கிராண்ட் செஸ் டூரை வெல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்தார்.

இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;-

“கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் நட்சத்திரம் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பேபியானோ கருவானாவை வீழ்த்தி பெற்றுள்ள இந்தச் சிறப்புமிக்க வெற்றி, நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளம் விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த உத்வேகமாக அமையும். பிரக்ஞானந்தா தனது செஸ் பயணத்தில் மேலும் பல உயரங்களைத் தொட்டு, இந்தியாவிற்குப் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com