

சென்னை
தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும், திருச்சி கிழக்கு தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் பதவியை விஜய் ராஜினாமா செய்துள்ளார்.
அதற்காக அவர் கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதால், 234 தொகுதிகளில் ஒரு தொகுதி காலியாகிவிட்டது. இந்த நிலையில் தமிழக சட்டசபை செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தின் 17-வது சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் அவைக்கு வந்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும்.
அப்போது, தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை தவறாமல் கொண்டு வர வேண்டும். மேலும் நாளை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.