தமிழகத்தில் முதல் முறை: அரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள்

கடந்த 2024-ம் ஆண்டு சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டது.
தமிழகத்தில் முதல் முறை: அரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள்
Published on

சென்னை,

தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் கருத்தரிப்பு மையங்களுக்கு சவால் அளிக்கும் வகையில், கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 7-ந் தேதி ரூ.6.97 கோடி மதிப்பில் சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டது.

செயற்கை கருத்தரிப்பு

இந்த மையத்தில், குழந்தை இல்லாத பல பெண்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 32 வயது பெண் ஒருவருக்கு, செயற்கை கருத்தரிப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.

5 ஆண்டுகளாக குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த அந்த பெண்ணின் கருப்பையில் கருமுட்டை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து, சிகிச்சை அளித்து வந்தனர்.

இரட்டை குழந்தைகள்

அந்தப் பெண் கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியான அந்தப் பெண்ணுக்கு கடந்த மாதம் (ஜூன்) 23-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் மற்றும் பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன.

ஒரு குழந்தை 1.3 கிலோ எடையிலும், இன்னொரு குழந்தை 1.28 கிலோ எடையிலும் இருந்தது. குழந்தைகள் எடை குறைவாக இருந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளன.

இது ஒரு வரப்பிரசாதம்

தமிழகத்தில் முதன்முறையாக அரசு மகப்பேறு மருத்துவமனையில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் மூலம் பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குழந்தை இல்லாத ஏழை பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com