

தூத்துக்குடி,
தூத்துக்குடி, திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக இருந்தபோதிலும், சந்தையில் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி, திரேஸ்புரத்திலிருந்து கடலுக்குச் சென்ற நாட்டுப்படகுகள் கரை திரும்பின. கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதன் காரணமாக, வலைகளில் சிக்கிய மீன்களின் வரத்து வழக்கத்தைவிட குறைவாகவே காணப்பட்டது.
மீன் வரத்து குறைந்த சூழலில், திரேஸ்புரம் மீன் ஏலக்கூடத்தில் மீன்களை வாங்குவதற்காகப் பொதுமக்கள், வியாபாரிகள் அதிக அளவில் திரண்டனர். இதனால் ஏற்பட்ட கடுமையான போட்டி காரணமாக மீன்கள் அனைத்தும் கூடுதல் விலைக்கு விற்பனையாகின.
இந்த நிலையில் தூத்துக்குடியில் மீன் சந்தையில் மீன்களின் விலை நிலவரம் பின்வருமாறு இருந்தது. சீலா மீன் ஒரு கிலோ ரூ.1,300, விளை மீன் கிலோ ரூ.650, நண்டு கிலோ ரூ.600, பாறை மீன் கிலோ ரூ.500, ஊழி மீன் ஒரு கிலோ ரூ.450 என்றும், சாளை மீன் ஒரு கூடை ரூ.3,000க்கும் விற்பனை செய்யப்பட்டன.
வழக்கத்தைவிட கூடுதல் லாபம் கிடைத்ததால், தொழில் பாதிப்பிலிருந்து சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது என மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.