தூத்துக்குடியில் மதுபோதை தகராறில் மீனவர் கொலை: 3 பேர் கைது

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மீனவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடியில் மதுபோதை தகராறில் மீனவர் கொலை: 3 பேர் கைது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பார் கிராமத்தை சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மகன் ஜாய்விக்டோரியன் (வயது 26). மீனவரான இவர், திரேஸ்புரம் கடற்கரையிலிருந்து வல்லம் மூலம் மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த ஏப்ரல் 3-ம் தேதி இரவு, ஜாய்விக்டோரியன் தனது நண்பர்களுடன் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த 3 பேர் கொண்ட கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜாய்விக்டோரியனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஜாய்விக்டோரியனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன், முதலில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜாய்விக்டோரியன், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜாய்விக்டோரியன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய வடபாகம் போலீசார், இந்த தாக்குதல் தொடர்பாக திரேஸ்புரம் ஜெயபால் மகன் லிக்சன்(23), தனபதி மகன் ஐஸ்பர்(29) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com