12 பேர் கைதை கண்டித்து ராமேசுவரத்தில் இன்று விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

12 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்களின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை,
ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த 12 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி நேற்று பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் தங்கச்சிமடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் மறியல் செய்தனர்.
நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்கிய மறியல் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட சுமார் 300-க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
போராட்டம் நடத்தியவர்களுடன் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கபீப் ரகுமான், ராமேசுவரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மீரா தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீனவர்களை விடுவிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மீனவர்களை விடுவிக்க அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர்.
இதற்கிடையே ராமேசுவரம் துறைமுக கடற்கரையில் நேற்று அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இலங்கை கடற்படை சிறைபிடித்த 12 மீனவர்களையும் மீட்டு கொண்டுவர மத்திய-மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட நாட்களாக இலங்கை சிறையில் தவித்து வரும் அனைத்து மீனவர்களையும், மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளையும் மீட்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இந்த கோரிக்கைளை தெரிவிக்க, ஜனவரி 13-ந் தேதி ராமேசுவரத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை மீனவர்கள் நேரில் சந்தித்து பேச வாய்ப்புகளை மத்திய-மாநில அரசுகள் ஏற்படுத்தி தரவேண்டும் என்றும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று (புதன்கிழமை) ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். 26-ந் தேதி ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.






