

தூத்துக்குடி,
தூத்துக்குடி தாளமுத்துநகர் விவேகானந்தர் நகரைச் சேர்ந்த சீனி மகன் காந்தி (வயது 56) என்ற மீனவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மகன்களுக்கும் இடையே கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக தொழில் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு விவேகானந்தர் நகர் கடற்கரை அருகில் காந்தி மற்றும் அவரது மகன்களான அசோக்குமார்(27), அஜய்(22) ஆகிய 3 பேரும் அமர்ந்து தங்களது மீன்பிடி வலைகளை பின்னிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த செந்தில்குமார் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் 5 பேர் கொண்ட கும்பல், காந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது.
வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காந்தியை வெட்டியது. இதைத் தடுக்க முயன்ற அவரது மகன்கள் அசோக்குமார், அஜய் ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அப்போது அருகே வலை பின்னிக் கொண்டிருந்த கருப்பண்ணன் மகன் பூசாரி(58) மற்றும் அவரது மகன் விஜி(32) ஆகியோர் ஓடிவந்து இந்த மோதலை தடுக்க முயன்றனர்.
ஆத்திரமடைந்த அந்த 5 பேர் கொண்ட கும்பல், தடுக்க வந்த பூசாரி மற்றும் விஜி ஆகியோரையும் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த 5 பேரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய செந்தில்குமார் மகன்கள் உள்பட 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஒரே சமயத்தில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது. இதன் காரணமாக அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.