

மதுரை,
மதுரையை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் அனுமதியின்றி பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. விளக்குகளை அப்புறப்படுத்துவது, சாலைகள் இணைப்பு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைப்பது, வளைவு பகுதியில் சிவப்பு எச்சரிக்கை விளக்கு பொருத்துவது, சாலைகள் நடுவே அரளி செடிகள் நடப்பட வேண்டியது உள்ளிட்ட பணிகள் முழுமையாக செய்யப்படவில்லை.
இதனை சரிசெய்யவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசியல் கட்சியினர் தங்களின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்வது, தலைவர்களின் படங்களை வைத்து கொள்வது, தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதிக்கொள்வது போன்றவைகளை செய்யாமல் இருந்தாலே பெரும்பாலான விபத்துகள் தடுக்கப்படும்.
இதுபோன்ற செயல்களுக்கு மோட்டார் வாகன சட்டப்படி அனுமதி உள்ளதா?, இந்த நடவடிக்கைகளுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து வழக்கு இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் போக்குவரத்து துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் கட்சி கொடி கட்டுவதற்கு மோட்டார் வாகன சட்டத்தில் இடமில்லை. தலைவர்களின் படங்களை வைத்துக்கொள்ளவும், தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதி கொள்ளவும் அனுமதி இல்லை என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.