கொடைக்கானலில் காட்டாற்று வெள்ளம்: கயிறு கட்டி ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்த கிராம மக்கள்!

குறிப்பாக, குப்பான்பாறை ஆற்றில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
கொடைக்கானலில் காட்டாற்று வெள்ளம்: கயிறு கட்டி ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்த கிராம மக்கள்!
குப்பான்பாறை ஆறு
Published on: 

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள குப்பான்பாறை ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கீழ்மலை கிராம மக்கள் கயிறுகளின் உதவியுடன் ஆபத்தான முறையில் காட்டாற்று வெள்ளத்தில் கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தீவிரமடையும் பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றியுள்ள கீழ்மலை கிராமங்களான வெள்ளகவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மலைப்பகுதிகளில் உள்ள நீரோடைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

துண்டிக்கப்பட்ட போக்குவரத்து

குறிப்பாக, குப்பான்பாறை ஆற்றில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே முறையான மேம்பால வசதி இல்லாததால், கிராம மக்கள் தங்களது அன்றாட அத்தியாவசியத் தேவைகளுக்கும், தாங்கள் விளைவித்த விவசாயப் பொருட்களை வெளியூர்களுக்கு கொண்டு செல்லவும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

உயிரைப் பணயம் வைக்கும் மக்கள்

இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) ஆற்றில் வெள்ளம் சீறிப்பாய்ந்து ஓடிய நிலையிலும், வேறு வழியின்றி கிராம மக்கள் ஆற்றின் இருபுறமும் கயிறுகளைக் கட்டி, அதைத் தங்களது கைகளால் பலமாக பிடித்துக் கொண்டு ஆற்றைக் கடந்துள்ளனர். மேலும், தங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் விளைபொருட்களையும், அதற்கு பயன்படுத்தப்படும் பொதி சுமக்கும் குதிரையையும் வெள்ளத்தில் அடித்துச் செல்லாதவாறு கயிறுகளால் பிணைத்து, மிக ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து சென்றனர். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிப்பதால், ஆற்றோரக் கிராம மக்களுக்கு பாதுகாப்பான மாற்றுப் பாதைகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், இப்பகுதியில் நிரந்தரப் பாலம் அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com