தாமிரபரணியில் வெள்ளம் குறைந்தது: நெல்லை-திருச்செந்தூர் சாலையில் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

தாமிரபரணியில் வெள்ளம் குறைந்ததால், நெல்லை-திருச்செந்தூர் சாலையில் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
தாமிரபரணியில் வெள்ளம் குறைந்தது: நெல்லை-திருச்செந்தூர் சாலையில் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது
Published on

ஸ்ரீவைகுண்டம்,

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே புளியங்குளத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் வெள்ளநீர் நிரம்பி வழிந்து, அருகில் உள்ள நெல்லை-திருச்செந்தூர் மெயின் ரோட்டின் வழியாக வயல்களுக்குள் பாய்ந்தோடியது. இதனால் நெல்லை-திருச்செந்தூர் சாலையில் கடந்த 3 நாட்களாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அனைத்து பஸ்களும் வசவப்பபுரம், வல்லநாடு வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை அளவு குறைந்ததால், அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பும் குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைந்துள்ளது.

இதன் காரணமாக நெல்லை-திருச்செந்தூர் சாலையில் சென்ற வெள்ளநீர் வடிந்தது. இதனால் நேற்று காலையில் இருந்து நெல்லை-திருச்செந்தூர் சாலையில் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதில் பஸ், கார்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் அந்த வழியாக சென்றன.

இதேபோன்று ஸ்ரீவைகுண்டம் அருகே கொங்கராயகுறிச்சியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால், 19 குடும்பத்தினரை அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்து இருந்தனர். நேற்று கொங்கராயகுறிச்சியிலும் வெள்ளம் தணிந்ததால், பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்பினர். தொடர்ந்து புளியங்குளம், கொங்கராயகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் தேங்கிய வெள்ளத்தை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.

தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து வினாடிக்கு 46 ஆயிரத்து 234 கனஅடி வீதம் தண்ணீர் நேற்று வீணாக கடலுக்கு சென்றது.

ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் பகுதியில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பியதால், அந்த கால்வாய்களில் தண்ணீர் திறக்கவில்லை. மருதூர் அணையின் மேலக்கால் வழியாக வினாடிக்கு 660 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com