வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்கள்: த.வெ.க. அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

த.வெ.க. அரசின் முதல்-அமைச்சரின் செய்கைகளை கண்டு விவசாயிகள் கொதித்துப்போய் உள்ளனர். என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க த.வெ.க. கூட்டணி அரசை வலியுறுத்தல். இது தொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கன மழை

கடந்த இரண்டு நாட்களாக திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த திடீர் மழையினால் சுமார் 2000 ஏக்கர் நிலத்தில் விளைவித்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. விவசாயத்திற்கு ஆதாரம் தண்ணீர். தண்ணீருக்கு மழைதான் ஆதாரம்! கடந்த இரண்டு நாட்களாக டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் பெய்த கன மழை, சுமார் 2000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளின் வாழ்வை அடியோடு புரட்டிப்போட்டுள்ளது.

விவசாயிகள் கண்ணீர்

கன மழையால் அறுவடைக்குத் தயாரான நெற்கதிர்கள் எதிர்பாராத மழையால் சேதமடைந்ததை எண்ணி அப்பகுதி விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இவர்களின் கண்ணீரைத் துடைப்பது த.வெ.க. கூட்டணி அரசின் கடமையாகும். அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறக்க கனவு காணும் பொய்க்கால் அரசின் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், இந்த ஜென்மத்தில் அல்லலுறும் விவசாயிகளை காக்கும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

வேதனையில் விவசாயிகள்

இந்த அரசு ஜூன் 12-ல், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடாத நிலையில், நிலத்தடி நீரை நம்பி கடன் வாங்கி வேளாண் பயிர் செய்திருந்த விவசாயிகள், தற்போது கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக இருக்கும் நேரத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த திடீர் மழையினால், பாடுபட்டு விளைவித்திருந்த நெற்கதிர்கள் மழையில் மூழ்கிய நிலையை பார்த்து விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தல் வாக்குறுதி

ஏற்கெனவே, த.வெ.க. தேர்தல் நேரத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய வேளாண் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு, தவணை முறையில் சிறிது, சிறிதாக வேளாண் கடனை தள்ளுபடி செய்யும் அறிவிப்புகளை வெளியிடும் த.வெ.க. அரசின் முதல்-அமைச்சரின் செய்கைகளை கண்டு விவசாயிகள் கொதித்துப்போய் உள்ளனர்.

30,000 ரூபாய் நஷ்டஈடு

தற்போது பெய்த கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு கை கொடுக்க இந்த அரசு முன்வர வேண்டும். தமிழக அரசின் வருவாய்த் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகளை உடனடியாக மழையால் பாதிக்கப்பட்ட திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி, பயிர் சேத விவரங்களை முழுமையாக கணக்கெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று பொய்க்கால் த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com