

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து குறையாததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்றும் 4-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் கடந்த 3 நாட்களாக குளிக்கத் தடை விதித்திருந்தனர்.
இந்நிலையில், இன்றும் (வியாழகிழமை) அருவியில் நீர்வரத்து குறையாமல் தொடர்ந்து அதிகமாக இருப்பதால், பாதுகாப்பு நடவடிக்கையாக குளிக்க விதிக்கப்பட்ட தடை4-வது நாளாக நீட்டிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. இருப்பினும், அருவியின் அழகைத் தூரத்திலிருந்து பார்வையிட மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அருவிப் பகுதியில் வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர்வரத்து சீரான பிறகே குளிக்க அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் தடையால் அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.