

தேனி,
தேனி மாவட்டம் சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு 4-வது நாளாக இன்றும் வனத்துறையினர் தடை விதித்தனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவி, தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. மேகமலை, ஹைவேவிஸ், இரவங்கலாறு, தூவானம், அரிசிப்பாறை மற்றும் காப்புக்காடு உள்ளிட்ட வனப்பகுதிகளில் பெய்யும் மழைநீர், சுருளி அருவியில் நீர்வீழ்ச்சியாகக் கொட்டுகிறது.
கடந்த சில நாட்களாக மேகமலைப் பகுதியில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுருளி அருவிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து, அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கம்பம் மேற்கு வனச்சரக வனத்துறையினர் அருவியில் குளிப்பதற்குத் தடை விதித்தனர்.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்லவும், அங்கு குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை இன்றும் நீட்டிக்கப்பட்டது. இதனால் அருவிக்கு வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அருவியில் நீர்வரத்து குறைந்து, பாதுகாப்பான சூழல் ஏற்பட்ட பிறகே சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.