கனமழையால் வெள்ளப்பெருக்கு: கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து நீர்வரத்து இருக்கும்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரை அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதேபோல தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும், புண்ணிய தலமாகவும் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி திகழ்கிறது. இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சுருளி அருவி பகுதி, ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் எதிரொலியாக, நேற்று காலை சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், சுருளி ஆற்று பகுதிக்கு பொதுமக்கள் சென்று விடாமல் இருக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com