

தூத்துக்குடி,
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சோதனைகளின் போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம் உள்ளிட்ட தகவல்கள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக மொத்தம் 77 லட்சத்து 1 ஆயிரத்து 696 ரொக்கத் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 5 லட்சத்து 5 ஆயிரத்து 477 ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தொகையில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு மொத்தம் 72 லட்சத்து 18 ஆயிரத்து 146 ரொக்கத் தொகை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல்களை தவிர்க்கவும், முறையற்ற பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவும் மாவட்டம் முழுவதும் சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.