

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த ஆண்டு (2020) ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்களிடம் இருந்து, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது. அடுத்த ஆண்டு முதல் 100 சதவீதம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும் என இந்திய ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதளம் வழியாகவோ அல்லது ஹஜ் குழு மொபைல் ஆப் ( HCol ) வழியாகவோ வருகிற நவம்பர் 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வெள்ளை நிற பின்னணியுள்ள புகைப்படம், இந்திய பன்னாட்டு பாஸ்போர்ட் (20.01.2021 வரை செல்லத்தக்கது), முகவரி சான்று, ஒரு நபருக்கு ரூ.300 வீதம் செலுத்தப்பட்ட வங்கி ரசீது அனைத்தையும் விண்ணப்பத்துடன் ஆன்லைன் மூலம் மட்டும் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப நேரடியாகவோ, மாவட்டங்களில் உள்ள ஹஜ் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது தமிழ்நாடு மாநில ஹஜ் குழு அலுவலகம் மூலமாகவோ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயல்படுத்தி வருகிறது. ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிப்பது தொடர்பான செய்திகளை தெரிந்து கொள்ள இந்திய ஹஜ் குழுவின் தகவல் மையம் 022-22107070(100 இணைப்புகள்) என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.