இஸ்லாமிய மக்களின் முன்னேற்றத்துக்கு தி.மு.க. துணை நிற்கும் மு.க.ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து

இஸ்லாமிய மக்களின் முன்னேற்றத்துக்கு தி.மு.க. துணை நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இஸ்லாமிய மக்களின் முன்னேற்றத்துக்கு தி.மு.க. துணை நிற்கும் மு.க.ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து
Published on

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது.

தங்களுடைய மெய்வருத்தி நோன்பிருந்து, அன்பு, இரக்கம், கருணை, ஈகை எனும் மானுடத்தின் மிக உயர்ந்த பண்புகளை தமது செயல்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் தி.மு.க. சார்பில் ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாமிய மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், சமூக முன்னேற்றத்திற்காகவும் தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியிருப்பதை இஸ்லாமியப் பெருமக்கள் நன்கு உணருவார்கள் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு.

1969-ல் மீலாதுநபிக்கு முதன்முதலில் அரசு விடுமுறை; உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்தது; இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் சமுதாய மக்கள் பெரும் பயனடையும் வகையில் சிறுபான்மையினர் நல ஆணையம் ஆரம்பித்தது; ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கையை 2 ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரத்து 400 வரை உயர்த்தியது. வக்பு வாரியச் சொத்துகளைப் பராமரிப்பதற்கென முதன் முறையாக 40 லட்சம் ரூபாய் மானியம் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு சாதனைத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு. தலைவர் கலைஞர் அவர்களின் இன்னும் பல சாதனைகளை வரிசையாகப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஆகவே இஸ்லாமிய மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்க்கைத்தரம் அனைத்து வகையிலும் மென்மேலும் உயர்ந்திட வேண்டும் என்ற உன்னத நோக்குடனும் செயல்பட்டு வரும் தி.மு.க.வின் சார்பில், இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்து; சிறுபான்மையின மக்களின் சமூக கல்வி பொருளாதார முன்னேற்றத்திற்காக தி.மு.க. என்றைக்கும் உற்ற துணையாக விளங்கிடும் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com