

சென்னை,
அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடந்த 1996ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரத்து 331 அமெரிக்க டாலரை முறைகேடாக டெபாசிட் செய்ததாக கூறி அவர் மீது அமலாக்கத்துறையினர் அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை எழும்பூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. அமலாக்கத்துறை சார்பில் 12 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அவர்களிடம் டி.டி.வி.தினகரன் தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தினார். குறுக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் அமலாக்கத்துறையின் சாட்சிகள் அளித்த சாட்சியங்கள் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க டி.டி.வி.தினகரன் 26ந் தேதி(அதாவது நேற்று) நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி நேற்று அந்த வழக்கு நீதிபதி மலர்மதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது டி.டி.வி.தினகரன் கோர்ட்டில் ஆஜரானார். அவரது தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் குமார், அமலாக்கத்துறை அளித்த சாட்சியங்கள் அடிப்படையில் இந்த கோர்ட்டு கேட்கும் கேள்விகளை தவிர்த்து என்னென்ன கேள்விகளை கேட்க வேண்டும் என்று கேள்விகள் குறித்த பட்டியலை அளிக்க தயாராக இருப்பதாகவும், அதற்கு அனுமதி அளித்து எங்கள் தரப்பு கேள்விகளை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். அதற்கு சட்டத்தில் வழிமுறை எதுவும் இல்லை என்று கூறி டி.டி.வி.தினகரன் தரப்பு கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.
இதன்பின்பு மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறையின் சாட்சிகள் கூறிய சாட்சியங்கள் அடிப்படையில் டி.டி.வி.தினகரன் மீதான குற்றச்சாட்டு குறித்து நீதிபதி பல்வேறு கேள்விகளை கேட்டார். அதில் பல கேள்விகளுக்கு எதுவும் தெரியாது என்றும், சில கேள்விகளுக்கு அதுதொடர்பான பதிலையும் டி.டி.வி.தினகரன் கூறினார்.
இந்த விசாரணை மாலை 6 மணி வரை 2 மணி நேரம் நடந்தது. அதன்பின்பு, டி.டி.வி.தினகரன் தரப்பில் சாட்சியம் அளிக்க யாரேனும் தயாராக இருந்தால் அவர்கள் குறித்த பட்டியலை அளிக்கும்படி டி.டி.வி.தினகரன் தரப்பு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், விசாரணையை அடுத்த மாதம்(நவம்பர்) 1ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.